11 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியில்லை: வேல்ராஜ்
11 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியில்லை: வேல்ராஜ்
ADDED : மார் 06, 2024 11:56 PM
சென்னை:''லோக்சபா தேர்தலால், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு கால அட்டவணையில் பாதிப்பு இருக்காது,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலையில், தொழில் துறை செயற்கை நுண்ணறிவு தொடர்பாக, மூன்று நாள் கருத்தரங்கம், பல்கலையின் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில், நேற்று துவங்கியது.
தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி பெறும் நிலையில், கல்வி நிறுவனங்களும், தொழில் துறையினரும் இணைந்து, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தேவை குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்,'' என்றார்.
பின், துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. வழக்கமான மாதங்களில் தேர்வுகள் நடக்கும். பெரும்பாலான தேர்வு நாட்கள், லோக்சபா தேர்தலுக்கு பிறகே இருக்கும். தேர்தலுக்காக செமஸ்டர் தேர்வு கால அட்டவணையில், பெரிய பாதிப்பு இருக்காது.
அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற, 11 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கடந்த கல்வியாண்டில், 5 சதவீதத்துக்கு குறைவாகவே மாணவர் சேர்க்கை நடந்துள்ளதால், அந்த கல்லுாரிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

