அ.தி.மு.க., வேண்டாம்! தனித்து போட்டியிட விஜய் விருப்பம்; சேர்வோர் சேரலாம் என்றவர் மனநிலையில் மாற்றம்
அ.தி.மு.க., வேண்டாம்! தனித்து போட்டியிட விஜய் விருப்பம்; சேர்வோர் சேரலாம் என்றவர் மனநிலையில் மாற்றம்
ADDED : மார் 02, 2025 02:52 AM
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, த.வெ.க., தலைவர் விஜய் விரும்பவில்லை என்றும், தனித்து போட்டியிடவே அவர் தயாராகி வருவதாகவும், விஜயின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். கூட்டணி வைக்கவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரவும் தயாராக இருப்பதாக கூறியிருந்த விஜய், தற்போது தன் மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.
கடந்த 2024 பிப்ரவரி 2ல், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் துவக்கினார். லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டசபை தேர்தலே தன் இலக்கு என அறிவித்த அவர், அதற்கான பணிகளை ஓராண்டுக்கு முன்னரே ஆரம்பித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 27ல், விக்கிரவாண்டியில் த.வெ.க.,வின் முதல் மாநாட்டை நடத்திய விஜய், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து, சட்டசபை தேர்தல் தொடர்பாக, இரண்டு கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பிரசாந்த் கிஷோருடன் இணைந்து, தி.மு.க.,வுக்கு தேர்தல் வேலை செய்த ஆதவ் அர்ஜுனா, இப்போது த.வெ.க.,வில் இணைந்து, தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
பிப்ரவரி 26ல், த.வெ.க.,வின் இரண்டாம் ஆண்டு விழா, மாமல்லபுரம் அருகே நடந்தது. அதில் பங்கேற்று பேசிய பிரசாந்த் கிஷோர், 'தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய். தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார். 2026 சட்டசபை தேர்தலில், விஜய் வெற்றி பெறுவார்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தனியார் செய்தி சேனலுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி:
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே விஜயின் முடிவு. த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., விரும்புகிறது; ஆனாலும், விஜய் அதை விரும்பவில்லை. தனித்து போட்டியிட்டு, விஜய் ஆட்சி அமைப்பார். தனிப் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் த.வெ.க., வெற்றி பெறும்.
பீஹார் தேர்தலில் எனக்கு உதவி செய்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார். அங்கு, விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முடிவில் மாற்றம்
விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க., முதல் மாநாட்டில் பேசிய விஜய், 'அரசியலில் தனிப் பெரும்பான்மை கிடைத்தாலும், அரசியலில் நம்முடன் கலந்து வருபவர்களுக்கு, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரப்படும்' என்று கூறியிருந்தார்.
இதனால், சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கவும், கூட்டணி ஆட்சிக்கும் அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்தே, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி காய் நகர்த்தி வந்தார்.
இந்நிலையில், த.வெ.க., தனித்து போட்டியிடும் என, விஜயின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் அறிவித்திருப்பது, கூட்டணி தொடர்பான தன் முடிவை விஜய் மாற்றிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.
விஜய் தனித்து போட்டியிடுவது உறுதியானால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - நாம் தமிழர் என, ஐந்துமுனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகும்.
கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதல், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், வி.சி., - ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை உள்ளன.
இரண்டு லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில் வென்ற இக்கூட்டணியை உடைக்க, அ.தி.மு.க., மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இப்போது விஜயும் கைவிரித்து விட்டதால், 2021 போல, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை, அ.தி.மு.க.,வுக்கு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
-நமது நிருபர் -