முதல்வரை கேள்வி கேட்க அதிகாரம் தேவையில்லை: அண்ணாமலை
முதல்வரை கேள்வி கேட்க அதிகாரம் தேவையில்லை: அண்ணாமலை
ADDED : மே 17, 2025 02:29 AM

திருவண்ணாமலை : ''தமிழக முதல்வரை ஒரு சாமானியனாக இருந்து விமர்சனம் செய்யலாம்; அதற்கு அதிகாரம் தேவையில்லை,'' என, மாநில பா,ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
பா.ஜ., நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, திருவண்ணாமலை வந்த அண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்திருந்தாலும் கூட, ஜனாதிபதிக்கு ஒரு சந்தேகம் இருந்தால் ஆர்டிகல், 143ன் படி, கேள்வி எழுப்ப அதிகாரம் கொடுத்துள்ளனர்.
ஏப்., 8ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஜனாதிபதி, 143 ஆர்டிகலை பயன்படுத்தி, 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். ஜனாதிபதி கேட்பதில் எந்தத் தவறும் கிடையாது.
சுதந்திர இந்தியாவில், 1950க்குப் பிறகு ஏற்கனவே, 15 முறை ஜனாதிபதியால், உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது, 16வது முறை.
சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்தபோது, ராமர் கோவில் முதலில் இருந்ததா, பாபர் மசூதி முதலில் இருந்ததா என, 143ஐ பயன்படுத்தி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, உச்ச நீதிமன்றம் பதிலளிக்க மறுத்துவிட்டது. இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக இருக்கிறது, உச்ச நீதிமன்றம் அவர்கள் வரம்புக்குள்ளும், ஜனாதிபதி அவரது வரம்புக்குள்ளும் வேலை பார்க்கின்றனர்.
ஜனநாயகம் சரியாக இருக்கிறது. சரியாக இருக்கின்ற காரணத்தினால்தான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்த ஜனாதிபதிபதி, இந்த கேள்விகளை கேட்டிருக்கிறார்.
தமிழக முதல்வரை, நான் ஒரு சாமானியனாக இருந்து விமர்சனம் செய்யலாம். அதற்கு அதிகாரமிருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழக முதல்வரின் எந்த விஷயத்தையும் விமர்சனம் செய்ய கருத்துரிமை உண்டு.
அதே நேரத்தில் கட்சி யார் கூட சேரணும், சேரக்கூடாது என்பது குறித்து கருத்து கூற முடியாது. ஓ.பன்னீர்செல்வம், எப்போதும் எங்களுடன்தான் இருக்கிறார். பிரதமர் மோடியின் இதயத்தில், ஸ்பெஷல் இடம் அவருக்கு உண்டு. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.