ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம்; ஐ.ஜே.கே., மாநாட்டில் தீர்மானம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம்; ஐ.ஜே.கே., மாநாட்டில் தீர்மானம்
ADDED : மார் 03, 2024 04:55 AM
திருச்சி : இந்திய ஜனநாயக கட்சி சார்பில், 'தேசம் காப்போம்; தமிழை வளர்ப்போம்' என்ற பெயரில், திருச்சியில் நேற்று மாநில மாநாடு நடந்தது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில், எம்.பி., பாரிவேந்தரின் தொடர் முயற்சியால், அரியலுார், பெரம்பலுார், துறையூர் மற்றும்- நாமக்கல் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை, மத்திய ரயில்வே துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதற்காக பாரிவேந்தருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பல்கலைகளில் புதிய ஆராய்ச்சிகளுக்கும். புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்தால், பல லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, எதிர்காலம் மிகப்பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
அதை தடுக்கா விட்டால், இன்னும் 10 ஆண்டுகளில், தமிழகம் மிகப்பெரிய சமுதாய சீரழிவை சந்திக்கும் என்பதை உணராத தமிழக அரசை கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும், என வலியுறுத்தி வருகின்றன.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், மக்கள்தொகை குறைவாக உள்ள சமுதாயத்தினர் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். எனவே, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கூடாது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

