ADDED : மே 20, 2025 06:19 AM

சென்னை : 'கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வாய்ப்பில்லை' என, வேளாண் துறை கைவிரித்துள்ளது.
கோடை மழை காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அறுவடை நேரத்தில் ஏற்பட்ட இழப்பால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகங்கள் வாயிலாக, பயிர் பாதிப்பு ஆய்வு செய்யப்பட்டு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட வேளாண்மை, தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் வருகின்றனர்.
ஆனால், 'கோடை பருவ பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வாய்ப்பில்லை' என, வேளாண் துறையினர் கைவிரித்துள்ளனர்.
'பயிர் காப்பீடு செய்திருந்தால், அந்த பயிர்களுக்கு மட்டும் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் தெரிவித்துஉள்ளனர்.