எட்டு வீடுகள் வரை பணி நிறைவு சான்று வேண்டாம்: முத்துசாமி
எட்டு வீடுகள் வரை பணி நிறைவு சான்று வேண்டாம்: முத்துசாமி
ADDED : ஜன 30, 2024 03:49 AM

சென்னை: ''தமிழகத்தில், எட்டு வீடுகள் வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு அளிக்கப்பட உள்ளது,'' என, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான, 'கிரெடாய்' மாநில மாநாட்டில், அவர் பேசியதாவது:
நகர், ஊரமைப்பு சட்டத்திருத்தம் தொடர்பான உத்தரவுகள், விரைவில் பிறப்பிக்கப்படும். கட்டுமான திட்ட அனுமதிக்கு, ஒற்றை சாளர முறையை, எந்த சிக்கலும் இல்லாமல் அமல்படுத்த தயாராகிவருகிறோம்.
திட்ட அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள், தேவையான அனைத்து ஆவணங்களையும், விபரங்களையும் உரிய முறையில் அளித்தால், முடிவு எடுப்பதில் தாமதத்தை தவிர்க்கலாம்.
பெரும்பாலான திட்டங்களில், விண்ணப்பதாரர் தரப்பில் அலட்சியமாக இருப்பதும் தாமதத்துக்கு காரணமாகிறது.
சாதாரண குடியிருப்பு கட்டடங்களின் உயரம், பொது கட்டட விதிகளில், 39 அடியாக உள்ளது. இதனால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் வைத்து, இந்த உயரத்தை, 45 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, சாலை அகல அடிப்படையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கான, எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டை உயர்த்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக, உரிய உத்தரவுகள் விரைவில் வெளியாகும்.
கர்நாடகாவில் உள்ளது போன்று, உரிமையாளரின் சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது, பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்யும் போதே, விதிமீறல் அதிகமாக வருகிறது.
உரிமையாளர்கள் பொறுப்புடன் நடக்க முன்வந்தால், 10,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, இந்நடைமுறையை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.
தற்போது, பொதுகட்டட விதிகளின்படி, 8,000 சதுர அடி அல்லது, மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்ற நிலை உள்ளது. இதை, எட்டு வீடுகள் என்று மாற்றுவதற்கான உத்தரவு, விரைவில் வெளியிடப்படும்.
தமிழகத்தில், 7 சதவீத பகுதிகளுக்கு மட்டும் தான் முழுமை திட்டம் உள்ளது. இதை, 19 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், எட்டு நகரங்களுக்கு புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நகர், ஊரமைப்பு துறை இயக்குனர் பி.கணேசன், கிரெடாய் தேசிய துணை தலைவர் ஸ்ரீதரன், தமிழக பிரிவு தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.