இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் இல்லை மாநகராட்சி கூட்டத்தில் காங்.,குக்கு அ.தி.மு.க., ஆதரவு
இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் இல்லை மாநகராட்சி கூட்டத்தில் காங்.,குக்கு அ.தி.மு.க., ஆதரவு
ADDED : டிச 28, 2024 03:54 AM
ஈரோடு: ஈரோட்டில், மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. துணைமேயர் செல்வராஜ், துணை ஆணையர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் மறைவுக்காக, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விபரம்:
காங்., சபுரமா:
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் மறைவுக்கு, கூட்டத்தில் முதல் தீர்மானமாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். வேண்டுமென, தீர்மானம் வைக்கப்படவில்லை. இப்போது, தனித் தீர்மானமாக கொண்டு வந்து, அனைத்து கவுன்சிலர்களுக்கும் பிரின்ட் அவுட் கொடுத்து, முதல் தீர்மானமாக சேர்க்க வேண்டும்.
மாநகராட்சி அதிகாரி:
நாங்களாக இரங்கல் தீர்மானத்தை, பொருளில் சேர்க்க இயலாது. யாராவது ஒரு கவுன்சிலர் முன்மொழிந்தால், மேயர் பரிந்துரைத்தால் தான் சேர்க்க இயலும்.
தி.மு.க., நந்தகோபு:
கூட்டணியில் இருந்துகொண்டு, மாமன்றத்தில் பிரச்னை எழுப்புவதைவிட, நீங்களே தீர்மான பொருளை கொடுத்திருக்கலாம்.  அப்போது பல தி.மு.க., கவுன்சிலர்கள், 'இது நம் பிரச்னை இல்லை. காங்கிரசுக்கும், அதிகாரிகளுக்குமானது. நாம் பேச வேண்டாம்; இளங்கோவன் மீது எங்களுக்கும் மரியாதை உள்ளது' என்று கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றனர்.
அ.தி.மு.க., ஜெகதீசன், தங்கமுத்து:
இதுபோன்ற இரங்கல் தீர்மானத்தை யார் எதிர்ப்பார்கள். அதிகாரிகளோ, மேயரோ சேர்த்திருக்கலாம். கவுன்சிலர்கள் பொருளாக வழங்கினால் தான் சேர்க்க வேண்டும் என ஏதுமில்லை. தனித் தீர்மானமாக கொண்டு வந்து சேருங்கள்.
உடன் தி.மு.க., மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி உட்பட சிலர், இரங்கல் தீர்மானத்தை முதல் தீர்மானமாக சேர்த்து விடுங்கள், எனக்கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

