sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டி இல்லை:தி.மு.க., 3, அ.தி.மு.க., 2, கமல் வெற்றி

/

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டி இல்லை:தி.மு.க., 3, அ.தி.மு.க., 2, கமல் வெற்றி

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டி இல்லை:தி.மு.க., 3, அ.தி.மு.க., 2, கமல் வெற்றி

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டி இல்லை:தி.மு.க., 3, அ.தி.மு.க., 2, கமல் வெற்றி

12


UPDATED : ஜூன் 02, 2025 11:20 AM

ADDED : ஜூன் 02, 2025 12:31 AM

Google News

UPDATED : ஜூன் 02, 2025 11:20 AM ADDED : ஜூன் 02, 2025 12:31 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க., நேற்று அறிவித்தது. ஏற்கனவே, தி.மு.க., சார்பில் மூன்று பேரும், அதன் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆறு பேரும் போட்டியின்றி எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் இருந்து ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஆறு இடங்களுக்கான தேர்தலில், தி.மு.க., மூன்றிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் போட்டியிடும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



தி.மு.க., சார்பில், தற்போதைய எம்.பி., வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில், கமல் போட்டியிடுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

உறுதியானது


தி.மு.க., கூட்டணி ஐந்து இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தால், தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். அதை விரும்பாத தி.மு.க., கூட்டணி, நான்கு இடங்களில் மட்டுமே போட்டி என்று அறிவித்தது.

எனவே, மீதமுள்ள இரு இடங்களில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதியானது. அ.தி.மு.க., கூட்டணியில் யாருக்கு 'சீட்' ஒதுக்குவது என்பதில் இழுபறி நீடித்தது. அக்கூட்டணியில் ஒரு சீட்டை தங்களுக்கு ஒதுக்கும்படி தே.மு.தி.க., வலியுறுத்தியது. ஆனால், ராஜ்யசபாவில் தற்போது இரண்டு எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டால் தான், ஐந்து எம்.பி.,க்கள் எண்ணிக்கையை தக்க வைக்க முடியும் என்பதால், இரு இடங்களிலும் அ.தி.மு.க.,வே களம் இறங்க முடிவு செய்தது.

அக்கட்சியில் வேட்பாளர் யார் என்பதிலும் இழுபறி நீடித்தது. முன்னாள் அமைச்சர்கள் பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். அவர்களை சட்டசபை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி முடிவு செய்தார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து, இரண்டு வேட்பாளர்களை முடிவு செய்தார்.



கூட்டணி தொடரும்




இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் முனுசாமி அளித்த பேட்டி:

அ.தி.மு.க., ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ராஜ்யசபா பதவிக்கான தேர்தலில், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இன்பதுரை, தனபால் ஆகியோர் அறிவிக்கப்படுகின்றனர். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., தொடரும். வரும் 2026ல் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலின் போது, தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை அ.தி.மு.க., வழங்கும்.

ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சி தே.மு.தி.க., அக்கட்சிக்கு, 2026 தேர்தல் முடிந்த பின், ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படும் என ஏற்கனவே பழனிசாமி தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தி உள்ளார்; கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Image 1425770


வேட்பாளர் தேர்வு பின்னணி

தி.மு.க., கூட்டணியில், நாடார் சமுதாயத்தினருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு, அந்த சமுதாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அதேபோல, பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாததும், விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பழனிசாமி முடிவு செய்தார். எனவே, தென் மாவட்டங்களில் கட்சி செல்வாக்கை அதிகரிக்க, நாடார் சமூகத்தினர் ஆதரவை பெற, கிறிஸ்துவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த இன்பதுரைக்கும்; பட்டியலின மக்களை கவர, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தனபாலுக்கும் ராஜ்யசபா எம்.பி.,யாக வாய்ப்பு அளித்துள்ளார். மேலும், தி.மு.க.,வில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதால், அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலராக உள்ள கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இன்பதுரைக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மொத்தமுள்ள ஆறு இடங்களுக்கு, தி.மு.க., கூட்டணி நான்கு, அ.தி.மு.க., இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. தி.மு.க., கூட்டணி நான்கு இடங்களில் மட்டும் போட்டியிடுவதால், அ.தி.மு.க., தங்கள் வேட்பாளர் வெற்றிக்காக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், கூட்டணி கட்சியான பா.ஜ., ஆதரவை கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

வேட்பாளர்கள் பயோ டேட்டா


பெயர்: ம.தனபால்வயது: 65
கல்வித்தகுதி: எம்.ஏ., - எம்.எல்., - எம்.பி.ஏ., - பிஎச்.டி.
இனம்: ஆதிதிராவிடர்
முகவரி: புதுப்பட்டினம், கல்பாக்கம் - 603 102
மாவட்டம்: செங்கல்பட்டு
கட்சி பொறுப்பு: மாவட்ட அவைத்தலைவர், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
அரசு பொறுப்புகள், 1991 - 96 வரை திருப்போரூர் எம்.எல்.ஏ.,; 2001 - 06 வரை மாவட்ட பஞ்சாயத்து தலைவர், 2011 - 16 வரை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்
மனைவி: காயத்ரி, வழக்கறிஞர், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர்.
பெயர்: ஐ.எஸ்.இன்பதுரை
வயது: 59
இனம்: கிறிஸ்துவ நாடார்
தொழில்: வழக்கறிஞர்

முகவரி: நாவலாடி, திசையன்விளை தாலுகா
மாவட்டம்: திருநெல்வேலி

அரசு பொறுப்பு: ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,
மனைவி: பிரசில்லா செல்வமாதா
மகள்: டெய்சிடிமோனா
கல்வித்தகுதி: பி.ஏ., - பி.எல்.,








      Dinamalar
      Follow us