குற்றங்களே இல்லை என்பதே சாதனை; போலீசாருக்கு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
குற்றங்களே இல்லை என்பதே சாதனை; போலீசாருக்கு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
ADDED : நவ 27, 2024 11:11 AM

சென்னை: 'குற்றங்களை குறைத்து விட்டோம் என்பது சாதனை அல்ல. குற்றங்களே இல்லை என்று சொல்வது தான் சாதனை' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை கலைவாணர் அரங்கில், சீருடைப் பணிக்கு தேர்வான 3,359 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 165 ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்கது காவல்துறை. காவல் துறையை மேம்படுத்த முதல்முறையாக காவல் ஆணையம் அமைத்தது தி.மு.க.,அரசு. உலக அளவில் சிறந்து விளங்கும் போலீசார் மற்றும் தமிழக காவல்துறை. காவல்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். காவல்துறைக்கு பக்கபலமாக தமிழக அரசு இருக்கிறது.
குற்றங்கள்
மக்களுடன் நெருக்கமாக காவல்துறை இருக்கிறது. குற்றங்களை குறைத்து விட்டோம் என்பது சாதனை அல்ல. குற்றங்களே இல்லை என்று சொல்வது தான் சாதனை. குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்வது சாதனை அல்ல. குற்றங்களை தடுத்து விட்டோம் என்று சொல்வதே சாதனையாக இருக்க வேண்டும். ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையாக தமிழக போலீசார் செயல்பட்டு வருகின்றனர் மக்களை காக்கும் போலீசாரை காக்கும் திராவிட மாடல் அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்.
பிரண்ட்லியாக இருங்க!
மக்களின் நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு போலீசார் இடம் தான் உள்ளது. கடைநிலை போலீஸ் அவர்களிடம் கூட உயர் அதிகாரிகள் பிரண்ட்லியாக இருக்க வேண்டும். இன்று பணியில் சேரும் போலீசார் இதே புத்துணர்ச்சி உடன் கடைசி வரை பணியாற்ற வேண்டும்.
உங்களது உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள். குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள். மக்களுக்கு போலீசார் மீது பயம் இருக்கக் கூடாது. மரியாதை தான் இருக்க வேண்டும். புகார் அளிக்க வரும் மக்களிடம் போலீசார் கனியுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

