ரேஷன் பொருட்கள் அனுப்புவது விடுமுறை நாட்களில் கிடையாது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை
ரேஷன் பொருட்கள் அனுப்புவது விடுமுறை நாட்களில் கிடையாது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை
ADDED : ஏப் 14, 2025 06:10 AM

'ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளான, மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில், ரேஷன் பொருட்களை அனுப்ப வேண்டாம்' என, கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் வசதிக்காக, மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
அதற்கு மாற்றாக, முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் கடைகளுக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற வாரங்களில், ஞாயிறு விடுமுறை உண்டு.
நிர்பந்தம்
ரேஷன் ஊழியர்களுக்கு விடுமுறையாக இருந்தாலும், முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில், ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் பணி நடந்து வந்தது.
வாரவிடுமுறையாக இருந்தாலும், கடைக்கு வந்து பொருட்களை பெற்று, கணக்கு பார்த்து வைக்க வேண்டிய நிர்பந்தம் ஊழியர்களுக்கு ஏற்பட்டது.
'விடுமுறை நாட்களில் பொருட்களை அனுப்ப வேண்டாம்' என, ரேஷன் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் எதிரொலியாக, முதல் இரண்டு வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், அந்த நாட்களில், அத்தியாவசிய பொருட்கள் அனுப்புவதை தவிர்க்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அறிவுறுத்தல்
கூட்டுறவு துறை அலுவலர்கள் கூறுகையில், 'ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினருடன், கடந்த மார்ச், 3ல் பேச்சு நடந்தது.
'பணியாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு துறை பதிவாளர் வாயிலாக, விடுமுறையாக உள்ள வெள்ளிக்கிழமை நாளில், ரேஷன் பொருட்கள் அனுப்பும் பணியை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.
-- நமது நிருபர் -