3 மாதமாக குடிநீர் இல்லை பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
3 மாதமாக குடிநீர் இல்லை பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூன் 17, 2026 01:48 AM
வந்தவாசி: வந்தவாசி அருகே, மூன்று மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து, பெண்கள் காலி குடங்களுடன் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஓசூர் எட்டிக்குட்டை கிராமத்தில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு, 2 கி.மீ., துாரத்தில் இருந்து பைப் லைன் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு உயர் மட்ட பாலம் பணி காரணமாக பள்ளம் தோண்டியதால், பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த, மூன்று மாதங்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி, பல முறை பஞ்., நிர்வாகம், பி.டி.ஓ., நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை, 11:00 மணியளவில் வந்தவாசி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பி.டி.ஓ., சத்யா, அலுவலக அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், அவருக்கு எதிராக பெண்கள் கோஷம் எழுப்பினர்.
வந்தவாசி தெற்கு போலீசார், பி.டி.ஓ., சத்யாவிடம், பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில், பி.டி.ஓ., அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து, நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
