விவசாயிகளிடம் நேரடியாக வாங்கும் நெல்லுக்கு சந்தை கட்டணம் கூடாது: முதல்வருக்கு வணிகர்கள் கோரிக்கை
விவசாயிகளிடம் நேரடியாக வாங்கும் நெல்லுக்கு சந்தை கட்டணம் கூடாது: முதல்வருக்கு வணிகர்கள் கோரிக்கை
ADDED : நவ 13, 2024 04:34 AM
சென்னை : 'பிற மாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படும் நெல்லுக்கும், விவசாயிகளிடம் நேரடியாக பெறும் நெல்லுக்கும், சந்தை கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலர் ஏ.சி.மோகன் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 284 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படுகின்றன. அவற்றில், நெல் உள்ளிட்ட, 40 வேளாண் பொருட்களை விவசாயிகள் எடுத்து வந்தால், வியாபாரிகளிடம் விற்றுத்தர, வேளாண் துறை அதிகாரிகள் உதவுவர்.
இதற்காக, ஒரு சதவீதம் சந்தை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த நிதியை, கிடங்கு கட்டுவது போன்ற விவசாயிகள் நலனுக்கு செலவு செய்ய வேண்டும். விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவும், வியாபாரிகள் நெல் வாங்குகின்றனர்.
அந்த நெல்லை எடுத்துச் செல்லும்போது லாரிகளை நிறுத்தி, அதிகாரிகள் சந்தை கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர்.
பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்திற்கு லாரிகளில் நெல் எடுத்து வரப்படுகிறது. அந்த நெல்லுக்கு, அம்மாநிலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சந்தை கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், தமிழகத்திற்கு நெல் எடுத்து வரும் லாரிகளை மடக்கி, அதிகாரிகள் சந்தை கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதனால், பிற மாநிலங்களில் இருந்து நெல்வரத்து பாதிக்கும் என்பதால், தமிழகத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும்; விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, பிற மாநிலத்தில் எடுத்து வரப்படும் நெல்லுக்கும், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கப்படும் நெல்லுக்கும் சந்தை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

