நம்மை எதிர்த்து யார் வந்தாலும் தி.மு.க., தான் வெற்றி பெறும்: உதயநிதி பேச்சு
நம்மை எதிர்த்து யார் வந்தாலும் தி.மு.க., தான் வெற்றி பெறும்: உதயநிதி பேச்சு
ADDED : நவ 06, 2024 06:46 AM

திருவெண்ணெய்நல்லுார்: 'வரும் 2026 சட்டசபை தேர்தலில் நம்மை எதிர்த்து யார் வந்தாலும், எப்படிப்பட்ட கூட்டணி அமைத்தாலும் தி.மு.க.,தான் வெற்றி பெறும்' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல சிலையை திறந்து வைத்து அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசு மூலம், கடந்த மூன்றரை ஆண்டுகளாக மக்களுக்கான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணதிட்டம் மூலம் பெண்கள் மாதம், 900 முதல் 1,000 ரூபாய் வரை சேமிக்கின்றனர். இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்த துவங்கியுள்ளன. பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சம் பெண்கள் பயனடைகின்றனர்.
தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், என மாணவர்களுக்கு சிறப்பான திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் மாதம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தேர்தலுக்கு, 16 மாதங்களே உள்ளன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 100 சதவீத வெற்றி பெற்றோம். தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வெற்றி. வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் மதச்சார்பற்ற இண்டியா கூட்டணியே வெற்றி பெறும்.
நம்மை யார் எதிர்த்து வந்தாலும், எப்படிபட்ட கூட்டணி அமைத்தாலும், எந்த திசையில் இருந்து யார் வந்தாலும், ஏன் டில்லியில் இருந்து வந்தாலும் கூட, இனி தமிழகத்தில் தி.மு.க., தான் வெற்றி பெறும். இவ்வாறு உதயநிதி பேசினார்.

