ADDED : பிப் 11, 2026 01:14 AM

அச்சம் தேவையில்லை
''அமெரிக்க பருத்தியில் உருவான வங்கதேச ஆடை இறக்குமதிக்கு மட்டுமே வரிச்சலுகை என, அமெரிக்கா அறிவித்துள்ளது. அதனால், இந்திய ஏற்றுமதியாளர் அச்சப்பட தேவையில்லை,'' என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
இந்திய ஜவுளி பொருட்களுக்கு, அமெரிக்காவில், 18 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு, 30 - 35, வியட்நாம் - 20, பாகிஸ்தான் - 19 சதவீதம் என்ற அளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட, இந்தியாவுக்கு வரி விகிதம் குறைவு.
இதற்கிடையில், வங்கதேச ஆடைகளுக்கு, பூஜ்ஜிய வரிச்சலுகை அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருப்பது, புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, சக்திவேல் கூறுகையில், ''வங்கதேசத்துக்கு, அமெரிக்காவில் பூஜ்ஜிய வரிச்சலுகை என தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அமெரிக்காவில் விளையும் பருத்தியை இறக்குமதி செய்து, அதிலிருந்து ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும்போது மட்டுமே இந்த பூஜ்ய வரிச்சலுகை பொருந்தும்.
நமது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் போது இந்தியாவுக்கான சலுகை கிடைக்குமா என்ற தெளிவு ஏற்படும். அதுவரை, இந்திய ஏற்றுமதியாளர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.
அமெரிக்காவில் இருந்து, பஞ்சு இறக்குமதி செய்து, அதில் உருவாகும் ஆடைகளை, மீண்டும் தங்களுக்கே ஏற்றுமதி செய்தால், பூஜ்ஜிய வரி என்று, அதிபராக பதவியேற்றபோதே டிரம்ப் அறிவித்திருந்தார்.
அதன்படியே, வங்கதேசம் அந்த வாய்ப்பை பெற்றுள்ளது என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலர் குமார் துரைசாமி கூறினார்.

