ADDED : அக் 17, 2024 11:11 PM
சென்னை:'கொரோனா பரவல் காலத்தில், சாலையில் ஓடாத நாட்களுக்கு, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ல், கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. 2020 ஏப்ரல் முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின், 2021 செப்டம்பர் முதல் 50 சதவீத பயணியருடனும், அக்டோபர் முதல் முழுமையாகவும் பஸ்களை இயக்க, அரசு அனுமதித்தது.
அப்போது, ஆம்னி பஸ்களில் பயணிக்க ஆர்வம் காட்டாததால், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை, வாகனங்களை இயக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, ஆம்னி பஸ்களை இயக்காத நாட்களுக்கு சாலை வரி வசூலிக்கக் கூடாது என, உரிமையாளர்கள் கோரினர். ஆனால், பஸ்களை இயக்க அனுமதித்து விட்டதால், உரிமையாளர்கள் தரப்பில் அளித்த வாகன நிறுத்த அறிக்கையை, அரசு நிராகரித்தது.
பெரிய அளவில் இழப்பு
இதை எதிர்த்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். சங்க உறுப்பினர்கள் அளிக்கும் வாகன நிறுத்த அறிக்கையை ஏற்று, வாகன ஆய்வாளர்கள் சரிபார்க்க கோரி, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், மனுத் தாக்கல் செய்தார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:
வாகனங்களை இயக்காததால், மனுதாரர்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் இழப்பு தான். கொரோனா பரவலால், வாகனங்களை இயக்கவில்லை. உரிமையாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்தனர்.
மீண்டும் வாகனங்களை இயக்க, தகுதி சான்றிதழ், காப்பீடு புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டும்.
கடந்த 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை வாகனங்களை இயக்கவில்லை.
மோட்டார் வாகன வரிவிதிப்பு சட்டப்படி, வாகனங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், வாகனங்களை பயன்படுத்தாத நாட்களுக்கு, வரி செலுத்தும்படி உரிமையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.
சாலையில் ஓடாத நாட்களுக்கு அல்லது வாகனங்களை பயன்படுத்தாத நாட்களுக்கு, மனுதாரர்கள் வரி செலுத்த வேண்டியது இல்லை.
எனவே, வாகனங்களை சாலையில் இயக்காமல் நிறுத்தி விட்டால், அதற்கு வரி விதிக்க முடியாது. மோட்டார் வாகன விதிகளின்படி, நிபந்தனையை மீறினால், பர்மிட்டை ரத்து செய்யவோ, நிறுத்தி வைக்கவோ முடியும்.
நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால், 2023 ஜனவரி முதல் வரி செலுத்தி வாகனங்களை இயக்க, அரசு அனுமதித்துள்ளது.
அரசு ஏற்க வேண்டும்
வாகன நிறுத்த அறிக்கையை திருப்பி அனுப்பிய உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. வாகனங்கள் நிறுத்தம் தொடர்பாக, மனுதாரர்கள் தரப்பில் அளித்த விண்ணப்பங்களை, அரசு ஏற்க வேண்டும்.
பஸ்களை இயக்காத நாட்களுக்கு வரி செலுத்தும்படி வற்புறுத்தாமல், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்க, மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.