உயிர் சான்று தர வேண்டாம் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை
உயிர் சான்று தர வேண்டாம் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை
ADDED : ஜூலை 02, 2025 01:17 AM
சென்னை:'மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து, இனி வரும் காலங்களில், 'உயிர் சான்று பெற வேண்டாம்' என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளி நல அலுவலர் அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தசை சிதைவினால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட ஆறு வகை குறைபாடு உடையோருக்கு, பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது, ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளின் தரவுகளும், தமிழ்நாடு மின்னாளுமை முகமை வாயிலாக சரிபார்க்கப்பட்டு, இறந்த பயனாளிகளின் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, இனி வரும் காலங்களில், பராமரிப்பு உதவித்தொகை பெறும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து உயிர் சான்று பெற வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.