ராமரையும் தமிழகத்தையும் யாராலும் பிரிக்க முடியாது: கவர்னர் ரவி திட்டவட்டம்
ராமரையும் தமிழகத்தையும் யாராலும் பிரிக்க முடியாது: கவர்னர் ரவி திட்டவட்டம்
ADDED : ஜன 23, 2024 05:22 AM

சென்னை: ''ராமரையும் தமிழகத்தையும் யாராலும் பிரிக்க முடியாது,'' என, கவர்னர் ரவி பேசினார்.'சென்னையில் அயோத்தியா' என்ற நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:
நாட்டில் ஒரு முறை மட்டுமே வரும் இம்மாதிரியான நிகழ்வில் பங்கேற்கும், நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்கு பின், இதுபோன்ற நாட்கள் முக்கியமானவை.
ராமன் கதை
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை கொடுத்தவர்கள், அரசி யலமைப்பை பயிற்று வித்தவர்கள் என, அனைவருக்கும் ராம ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டும் என்ற கனவு இருந்தது.ராமரையும் தமிழகத்தையும் பிரித்து பார்க்க முடியாது. நாட்டில் நீண்ட துாரம் பயணித்துஉள்ளேன்.
எங்கு சென்றாலும் ராமர் குறித்து, அப்பகுதி மக்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். பழங்குடி நண்பர்களின் வீடுகளில் தங்கும் போதும், அவர்கள் ராமரின் கதைகளை, வெவ்வேறு வகைகளில் சொல்வதை கேட்டிருக்கிறேன்.
அவர்களின் மொழி, உணவு பழக்கம், உடைகள் வேறாக இருந்தாலும், அவர்கள் ராமரை நினைக்கின்றனர். நம் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் ராமர் கதை நிரம்பியுள்ளது. சிலப்பதிகாரம், அகநானுாற்றிலும் ராமர் குறித்து கூறப்பட்டு உள்ளது.
ராம ராஜ்ஜியம்
ராமருக்கு எதிராக போராடியவர்களின் பெயரிலும் ராமன் உள்ளது. ராமரையும் பாரதத்தையும் தமிழகத்தையும் என்றும் பிரிக்க முடியாது.
மோடி மக்களின் இதயத்தில் வாழ்கிறார். ராம ராஜ்ஜியத்திற்கான அடித்தளத்தை நிறுவ முயற்சிக்கிறார்.
ரிஷிகள் 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே, நமக்கு அறிவு, ஆற்றலை கற்று தந்து விட்டனர். அதை நாம் சனாதன தர்மம் என்று அழைக்கிறோம்.
நாட்டை ஒன்றிணைக்கும் சனாதன தர்மம் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறது. அனைவரும் எதிர்பார்த்த ராம ராஜ்ஜியத்தை நாட்டில் உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

