குற்ற வழக்கில் சிக்கியவர் தப்ப முடியாது: தனியார் தங்கும் விடுதிகளில் நவீன கேமரா
குற்ற வழக்கில் சிக்கியவர் தப்ப முடியாது: தனியார் தங்கும் விடுதிகளில் நவீன கேமரா
ADDED : மார் 27, 2025 04:14 AM

சென்னை: தனியார் தங்கும் விடுதிகளில், முக அடையாளங்கள் வாயிலாக, குற்றவாளிகளை கண்டறியும் தொழில் நுட்ப வசதிகளுடன், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தங்கம் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும், 'குருவி' என, அழைக்கப்படும் நபர்கள், தனியார் தங்கும் விடுதிகளில் பதுங்கி விடுகின்றனர். ரவுடிகள் மற்றும் கூலிப் படையினரும், தனியார் தங்கும் விடுதிகளை, சதி திட்டம் தீட்டும் இடமாக பயன்படுத்தி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக காவல் துறையில், எப்.ஆர்.எஸ்., எனப்படும் முக செயலி வாயிலாக, பழைய குற்றவாளிகளை அடையாளம் காணும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன சோதனையின் போது சந்தேகப்படும் நபரை, போலீசார் தங்கள் போனில் உள்ள, செயலி வாயிலாக படம் பிடிக்கும் போது, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், குற்ற வழக்கில் சிக்கிய நபரா என்ற விபரம் தெரிந்துவிடும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களிலும், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, தனியார் தங்கும் விடுதிகளில், அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய, எப்.ஆர்.எஸ்., செயலியுடன் கூடிய, கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளனர். குற்ற வழக்கில் சிக்கிய நபர்கள், தனியார் தங்கும் விடுதிகளுக்கு வந்தாலே, அவர்களின் முகத்தை படம் பிடித்து, அவரது குற்றப் பின்னணியை காட்டி கொடுத்துவிடும்.
இந்த வசதியை தனியார் தங்கும் விடுதி கண்காணிப்பு கேமராக்களில் பொருத்துவது தொடர்பாக, விடுதி உரிமையாளர்களுடன் பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.