ADDED : ஏப் 13, 2025 03:00 AM
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை:
தி.க.,வில் பேச்சாளராக இருந்தபோது, 'அடல்ட்ஸ் ஒன்லி' பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டதும், அதில் பேசப்பட்டதை நினைவுகூர்ந்து பேசியதும், அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதற்கு காரணமாகி உள்ளது.
நான் அண்ணாமலை பல்கலையில் படிக்கும்போது, முனைவர் பட்ட ஆய்வுக்காக, பொன்முடியும் அங்கு சேர்ந்திருந்தார். அங்கு, பொன்முடி போல் தி.க., பேச்சாளர்கள் அதிகம் இருந்தனர். அவர் தன் பேச்சில் குறிப்பிட்ட, 'அடல்ட்ஸ் ஒன்லி' பொதுக்கூட்டம் போல், ஒரு கூட்டத்தை அண்ணாமலை பல்கலையில் நாங்களும் நடத்தியிருக்கிறோம்.
அந்த கூட்டத்திற்கு முதலில் போலீசார் அனுமதி மறுத்து, பின் தந்தனர். அதற்கான சுவரொட்டியில் ஆங்கிலத்தில், 'ஏ' என்று பெரிதாக அச்சிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. 'தேவ லீலைகள்' என்ற தலைப்பில், திருவாரூர் தங்கராசு, 2 மணி நேரம் கூட்டத்தில் உரையாற்றினார்.
ஒழுக்கத்தை வலியுறுத்தும் சில புராணக் கதைகளில், அதற்கு முரண்பாடான விஷயங்கள் பேசப்பட்டுள்ளன என்பதை எடுத்துரைத்து அம்பலப்படுத்துவதாக, தங்கராசு பேச்சு இருந்தது. பெண்கள் கூட, அப்பேச்சை அமர்ந்து கேட்டனர். அந்த அளவுக்கு நாகரிகமாகவும், தர்க்கபூர்வமாகவும் அவரது பேச்சு அமைந்திருந்தது.
அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டதை போன்ற பேச்சை, தி.க., மேடைகளில் பேசி, நான் கேட்டதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

