யாரும் என்னை பார்க்க வராதீங்க; மகன் பதவி பறிப்பு விவகாரத்தில் ராமதாஸ் உறுதி
யாரும் என்னை பார்க்க வராதீங்க; மகன் பதவி பறிப்பு விவகாரத்தில் ராமதாஸ் உறுதி
UPDATED : ஏப் 12, 2025 11:56 AM
ADDED : ஏப் 12, 2025 11:55 AM

சென்னை: ''பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்' என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. நேற்று முன்தினம் அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார்.
இது பா.ம.க.,வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து, அன்புமணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும், ராமதாசுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த, திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிலும், பனையூரில் உள்ள அன்புமணி வீட்டிலும், குடும்பத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ''பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்' என ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தது தொடர்பாக, கடந்த இரு தினங்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

