UPDATED : மார் 15, 2024 03:17 AM
ADDED : மார் 15, 2024 02:53 AM

சென்னை: ''தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, அமைச்சராக பதவி ஏற்பதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்ப்பதற்காக, கவர்னர் டில்லி சென்றாரா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. அவ்வாறு சென்றிருக்க மாட்டார்.
ஏற்கனவே திட்டமிட்ட பணி இருந்திருந்தால், அவர் டில்லி சென்றிருக்கலாம். அவர் வந்த பின், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று நம்புகிறேன். லோக்சபா தேர்தல் அறிவிப்பிற்கும், பொன்முடி அமைச்சராக பதவி ஏற்புக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் அமைச்சராக பதவியேற்ற முன் உதாரணம் உள்ளது.
எனவே, இங்கும் அதேபோல பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கலாம். அதில், சட்ட ரீதியாக எந்த பிரச்னையும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

