செப்டம்பர் சம்பளம் இல்லை; 32,500 பேர் அதிர்ச்சி வாங்கிய கடனை திருப்ப முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு
செப்டம்பர் சம்பளம் இல்லை; 32,500 பேர் அதிர்ச்சி வாங்கிய கடனை திருப்ப முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு
ADDED : அக் 02, 2024 10:57 PM
சென்னை:தமிழகத்தில், ஆசிரியர்கள் 32,500 பேருக்கு, கடந்த மாதத்துக்கான சம்பளம் கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'மத்திய அரசை காரணம் காட்டி, தமிழக அரசு பொறுப்பை தட்டிக்கழிக்காமல், எங்களுக்கு சம்பளம் தர வேண்டும்' என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து, கல்வி வளர்ச்சிக்காக, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதற்காக, நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என, 15,000 பேரும், ஒப்பந்த அடிப்படையில் பகுதி 17,500 பேரும் என மொத்தம், 32,500 பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், செப்., மாதத்துக்கான சம்பளம் நேற்று வரை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
இந்தாண்டு, இந்த திட்டத்திற்காக, 3,585 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய அரசு, 1,434 கோடி ரூபாயையும், மாநில அரசு 2,151 கோடி ரூபாயையும் வழங்க வேண்டும். இதில், மத்திய அரசு முதல் காலாண்டு நிதியாக, 573 கோடி ரூபாயை வழங்க வேண்டும்; ஆனால், இதுவரை வழங்கவில்லை. மொத்தம், 822 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழக அரசு, மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையில் சேராமல் உள்ளதால், இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை விடுவிக்கும்படி, முதல்வர் ஸ்டாலின், கடந்த 27ம் தேதி, பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் நிதி கிடைக்காததால்தான், எங்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்றிய அரசிடம் இருந்து நிதியை பெற வேண்டியது, தமிழக அரசின் பொறுப்பு.
பொதுவாக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மிகக்குறைந்த சம்பளம் வாங்குகின்றனர்.
இதனால், மாதத் துவக்கத்திலேயே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு விட்டது. முன்பெல்லாம் சம்பளம் வாங்கி கடனை திருப்பித் தரலாம் என்ற நம்பிக்கையாவது இருந்தது. தற்போது, அதுவும் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழக அரசு, மத்திய அரசை காரணம் காட்டி எங்களை வஞ்சிக்காமல், மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசு, பிற துறைகளுக்கான நிதியிலிருந்து விதிகளுக்கு உட்பட்டு, 25 கோடி ரூபாயை பள்ளிக் கல்வி துறைக்கு மாற்றி, எங்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.