'மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது'
'மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது'
ADDED : ஆக 19, 2025 06:43 AM

சென்னை: 'மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது' என, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்துாரில், மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனத்தின் கார் மீது, மற்றொரு கார் மோதி நிற்காமல் சென்றது. இதுகுறித்து, தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாக ஆதீனம் புகார் கூறியிருந்தார். இது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் இருப்பதாக, மதுரை ஆதீனம் மீது, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, மதுரை ஆதீனம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆதீனத்தின் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு, செப்., 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரை, ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது' என, நீதிபதி உத்தரவிட்டார்.