ADDED : நவ 20, 2025 12:40 AM

கோவையில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அளித்த பேட்டி:
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் வாயிலாக, மிகப் பெரிய ஜனநாயக மோசடியை செய்ய உள்ளனர். இதில் தேர்தல் கமிஷனின் போக்கு, ஒருதலைபட்சமாக உள்ளது.
எனவே, எஸ்.ஐ.ஆர்., பணிகளை நிறுத்தக்கோரி, ம.தி.மு.க., சார்பிலும், நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்க இருக்கிறோம். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., ஆட்சி தொடர, ம.தி.மு.க., ஆதரவு அளிக்கும்.
ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக, கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினர் பேசி வரலாம். ஆனால், நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்டு எதுவும் பேச மாட்டோம். அது தொடர்பாக, இதுவரை எந்த பேச்சும் நடத்தவில்லை.
போதை ஒழிப்பு, ஜாதி மோதலை தடுக்க வலியுறுத்தி, ஜன., 2ல், திருச்சி - மதுரை, சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறேன்.
அதில் பங்கேற்கும் இளைஞர்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில், முழு மதுவிலக்கு அமல்படுத்த, அரசு முன்வர வேண்டும்.
டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் மட்டும், எந்தவித பிரயோஜனமும் இல்லை. போதை பொருட்கள் கடத்தி விற்பவர்களை தண்டிக்கும் வகையில், அது தொடர்பான சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

