தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில்... கட்டணம் இல்லை :தீபாவளி நெரிசலை தவிர்க்க அரசு ஏற்பாடு
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில்... கட்டணம் இல்லை :தீபாவளி நெரிசலை தவிர்க்க அரசு ஏற்பாடு
ADDED : அக் 27, 2024 12:09 AM

சென்னை:தீபாவளி நெரிசலை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளில், 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது.
பண்டிகை காலங்களில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்லும்போது, சுங்கச்சாவடிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கட்டணம் செலுத்த பல மணி நேரம், சில கி.மீ., துாரத்திற்கு வரிசை கட்டி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது, வாகன ஓட்டிகளுக்கு எரிச்சலை தருவதுடன், கால விரயத்தை ஏற்படுத்துகிறது.
இம்மாதம் விஜயதசமி விடுமுறை முடிந்து, மக்கள் சென்னை திரும்பியபோது, ஆத்துார், பரனுார் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து, சுங்க கட்டணம் செலுத்தாமலே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில், வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைப்பதால், சென்னை மற்றும் பெரிய நகரங்களில் இருந்து, சொந்த ஊருக்கு அதிகம் பேர் செல்ல உள்ளனர்.
ஆயிரக்கணக்கில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டாலும், டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முடிந்துவிட்டது.
இதனால் கார், வேன்களை மட்டுமே பயன்படுத்தும் கட்டாயம் நேர்ந்துள்ளது.
எனவே, 29, 30ம் தேதிகளில், பல லட்சம் மக்கள் வெளியேறும்போது சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றது.
அதன் தொடர்ச்சியாக, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டால், சுங்க கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுமதிக்கும்படி, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.