ADDED : பிப் 02, 2024 02:31 AM

முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
எடை போட்டு பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். கடந்த கால சாதனைகளையும் சொல்லவில்லை; நிகழ்கால பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அமையவில்லை; எதிர்கால பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்தத்தில் ஏதுமற்ற அறிக்கையை நிதி அமைச்சர் வாசித்து அளித்துள்ளார்.
பொது மக்களுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது. வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்கும் என, நடுத்தர மக்கள் எதிர்பார்த்தனர். அதையும் வழங்கவில்லை. சாதாரண, சாமானிய, ஏழை, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.
விவசாயிகளின் மிக முக்கியமான கோரிக்கையான, குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பும் இல்லை. இல்லை என்று சொல்வதற்காக எதற்கு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது, 'இல்லா நிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.
மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகையை, இந்த ஆண்டு வழங்குவது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால், இந்த ஆண்டு மட்டும் தமிழகத்துக்கு 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் அமைக்கவில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை. பா.ஜ.,வுக்கு தமிழகத்தில் ஓட்டு இல்லை என்பது காரணமா?
ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக்கூறி, இந்த நான்கு பிரிவினரையும் நான்கு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது.
பட்ஜெட்டில் தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கேள்வி எழுப்புவர். பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு கருப்பு சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் முயற்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கு பிரிவினரை மேம்படுத்துவதில், மத்திய அரசின் முழுவதுமான அணுகுமுறையை பட்ஜெட் உறுதிப்படுத்தியுள்ளது.
- - அண்ணாமலை, பா.ஜ., தமிழக தலைவர்.

