சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரிய 'டெட்' தேர்ச்சி பெறாதவர்களுக்கு அனுமதி
சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரிய 'டெட்' தேர்ச்சி பெறாதவர்களுக்கு அனுமதி
ADDED : ஜன 02, 2026 01:57 AM

சென்னை: தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2023 ஜன., 13க்கு முன் பணியில் சேர்ந்த, 154 ஆசிரியர்களின் நியமனம், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற விதியை பின்பற்றி, நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுபான்மை பள்ளிகளை பொறுத்தவரை, கட்டாய கல்வி உரிமை சட்டம் பொருந்தாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேசமயம், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு, கட்டாய கல்வி சட்டம் பொருந்தும் என்பதால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதோர் நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில், தகுதித் தேர்வு தேவை இல்லை என்றும், ஆசிரியர் தகுதித்தேர்வு தவறில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால், ஒரே பள்ளியில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதால், இதுகுறித்து, தொடக்க கல்வித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், தமிழக தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகள் நடைமுறைக்கு வந்த நாளான, 2023, ஜன., 13க்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்யலாம் என, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் 316 பட்டதாரி ஆசிரியர்கள், 154 இடைநிலை ஆசிரியர்கள் என, 470 ஆசிரியர்களின் கல்வித்தகுதியின் உண்மைத் தன்மைக்கு ஏற்ப பணி நியமனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை பின்பற்றி, எந்தவித முறைகேடும் நடக்காமல், 154 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன அனுமதி வழங்கும்படி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

