தமிழகத்தில் 'நான்வெஜ் ஸ்வீட்'டா? கைவிரிக்குது உணவு பாதுகாப்பு துறை!
தமிழகத்தில் 'நான்வெஜ் ஸ்வீட்'டா? கைவிரிக்குது உணவு பாதுகாப்பு துறை!
ADDED : செப் 21, 2024 01:05 AM
சென்னை:'கொழுப்பு கலந்த இனிப்புகளை சாப்பிட்டால், ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும். தமிழகத்தில் இதுவரை அவ்வாறான இனிப்புகள் தயாரிக்கப்படவில்லை' என, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:
மாட்டு எலும்புகளை உருக்கி, அதிலிருந்து செய்யப்படும் நெய்களை உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது. 'பாமோலின்' என்ற தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகள் வாயிலாக தயாரிக்கப்பட்ட லட்டுகளின் சுவை, அசல் நெய்யில் செய்த லட்டின் சுவையில் இருந்து நிச்சயம் மாறுபட்டிருக்கும்.
அவற்றை நம்மால் சாப்பிட முடியாது. அதன் வாசம், சாப்பிடும் முன் நமக்கு தெரிந்து விடும்.
மேலும், லட்டு போன்ற உணவுப் பொருட்களில் விலங்கு கொழுப்புகளை பயன்படுத்துவது மிகவும் சிரமமானது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில், பாமோலின் கலந்த தரம் குறைவான லட்டுகளை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்; கலர் சாயங்களையும் கலக்கின்றனர்.
விலங்கு கொழுப்புகளில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை உட்கொண்டால், ரத்தக் குழாய் அடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அதிகரிப்பு, கண் பார்வை இழப்பு, நெஞ்சு வலி போன்றவை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக உணவு பாதுகாப்பு துறை கூடுதல் கமிஷனர் தேவ பார்த்தசாரதி கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை விலங்கு கொழுப்புகள் கலந்த நெய்யில் இனிப்புகள் தயாரிக்கப்பட வில்லை. அவை தொடர்பான புகார்களும் பெறப்படவில்லை.
அவ்வப்போது நடத்தப்படும் ஆய்விலும், வழக்கமான முறைகளில் தான் இனிப்புகள் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.