குறைந்த சம்பளம் கொடுத்ததால் தண்டவாளத்தில் 'கிளிப்' அகற்றம்; வடமாநில வாலிபர்கள் கைது
குறைந்த சம்பளம் கொடுத்ததால் தண்டவாளத்தில் 'கிளிப்' அகற்றம்; வடமாநில வாலிபர்கள் கைது
ADDED : அக் 01, 2024 06:11 AM

மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டம், சூடியூர்--பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கிடையே செப்.16ல் ரயில்வே தண்டவாளத்தில் இருந்த 420க்கும் கிளிப்கள் அகற்றப்பட்டிருந்தன. உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, மூன்று தனிப்படைகள் விஷமிகளை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மற்றும் மானாமதுரை பகுதிகளில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் நான்கு பேரை விசாரித்தனர்.
அதன்படி, தொடர்புடைய சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 24, நித்தேஷ், 21, என இருவரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'இவர்களை வேலைக்கு அழைத்து வந்த ஏஜன்ட்கள், ரயில்வேயிடம் கூடுதல் சம்பளத்தை பெற்று, இவர்களுக்கு குறைந்த சம்பளத்தையே கொடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த இருவரும் தண்டவாள கிளிப்களை அகற்றியுள்ளனர்' என்றனர்.