ADDED : டிச 29, 2024 09:15 PM

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை, 33 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்.,1 முதல் டிச.,31 வரை வடகிழக்கு பருவமழை சீசன் எனப்படுகிறது. இந்த காலத்தில் தமிழகத்தில் பெய்த மழையானது, இயல்பாக பெய்யும் மழையை காட்டிலும் 33 சதவீதம் அதிகம். பெஞ்சல் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக, இந்த பருவத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது.
இதனால் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், 36 மாவட்டங்களில் இயல்பு மழையை காட்டிலும் அதிகப்படியான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. நீலகிரியில் மட்டும் இயல்பு மழையை காட்டிலும் ஒரு சதவீதம் குறைவாகவும், துாத்துக்குடியில் 8 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரியில் 87 சதவீதம், தர்மபுரியில் 62 சதவீதம், மதுரையில் 45 சதவீதம், ராணிப்பேட்டையில் 51 சதவீதம், சேலத்தில் 63 சதவீதம், சிவகங்கையில் 45 சதவீதம் அதிகப்படியான மழை பொழிந்துள்ளது.
திருநெல்வேலியில் 61 சதவீதம், திருப்பத்துாரில் 87 சதவீதம், திருப்பூரில் 44 சதவீதம், திருவள்ளூரில் 37 சதவீதம், திருவண்ணாமலையில் 50 சதவீதம், விழுப்புரத்தில் 67 சதவீதம், திருச்சியில் 43 சதவீதம், சென்னையில் 34 சதவீதம், கோவையில் 49 சதவீதம், இயல்பு மழையை காட்டிலும் அதிக மழை பொழிந்துள்ளது.
புதுக்கோட்டையில் 43 சதவீதம், வேலுாரில் 39 சதவீதம், திண்டுக்கல்லில் 30 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 43 சதவீதம் அதிப்படியான மழை பெய்துள்ளது.