விளம்பரத்துக்கான போராட்டம் அல்ல: தி.மு.க.,வுக்கு மார்க்சிஸ்ட் பதிலடி
விளம்பரத்துக்கான போராட்டம் அல்ல: தி.மு.க.,வுக்கு மார்க்சிஸ்ட் பதிலடி
ADDED : அக் 21, 2024 06:11 AM

மதுரை : 'மதுரை மாநகராட்சியில் பட்டா கேட்டு போராட்டம் நடத்தியது தற்பெருமைக்காகவோ, விளம்பரத்திற்காகவோ அல்ல' என, மார்க்சிஸ்ட் கட்சியினர் அமைச்சர் மூர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இம்மாநகராட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் போராட்டம் நடத்தி வருகிறார். அவரது பேச்சு, செயல்பாடுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி நேற்று முன்தினம் பேசினார்.
''தன் புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என, தவறாக பிரசாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். யாரையும் நம்பி நாங்கள் இல்லை,'' என காட்டமாக பேசினார்.
இந்நிலையில், மூர்த்திக்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர்கள் கணேசன், ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது:
தமிழகம் முழுதும் பட்டாவுக்கான இயக்கத்தை எங்கள் கட்சி நடத்துகிறது. அதுபோல்தான் மதுரையிலும் வெங்கடேசன் எம்.பி., தலைமையில் பட்டா கேட்டு முறையீடு இயக்கம் கடந்த 7ல் நடந்தது.
மாநகராட்சியில் பல ஆயிரம் பேர் பட்டா கேட்டு மனு அளித்து வருகின்றனர். அந்த ஏமாற்றம் தான் குமுறலாக, கோரிக்கையாக வெளிப்படுகிறது. விதிகளை காரணம் காட்டி, பல ஆண்டுகளாக அதிகார பீடங்களால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் தான், எங்களை நம்பி வருகின்றனர்.
அவர்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. போராட்டத்தை திசை திருப்புவது எங்கள் நோக்கம் அல்ல. திசை தெரியாமல் திகைத்து நிற்கும் மக்களை அணி திரட்டுவதே எங்கள் கடந்த கால வரலாறு. அதை, இப்போதும் மார்க்சிஸ்ட் உறுதியோடு முன்னெடுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரை தி.மு.க.,வினர் கூறுகையில், 'அரசியல் செய்ய வேண்டும் என்ற எம்.பி.,யின் தனிப்பட்ட ஆர்வத்தால்தான் இப்பிரச்னையே ஏற்பட்டது. இதை சுட்டிக்காட்டிய அமைச்சருக்கு, கட்சி சார்பில் பதில் அளிக்க வைத்து பிரச்னையை திசை திருப்புகிறார். கூட்டணிக்குள் இருந்து கொண்டு இப்படி குழப்பம் செய்வது நல்லதல்ல' என்றனர்.