மேகதாதுவில் அனுமதி இல்லாமல் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது: துரைமுருகன் பதில்
மேகதாதுவில் அனுமதி இல்லாமல் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது: துரைமுருகன் பதில்
ADDED : பிப் 22, 2024 01:08 PM

சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், 'தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது' என்றார்.
சட்டசபையில் இன்று (பிப்.,22) எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், காவிரி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: மேகதாது விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும்.
தமிழக அரசு அலட்சியத்தின் காரணமாக 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அச்சம் எழுந்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி தடை ஆணை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
துரைமுருகன் பதில்
இதற்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது. நீர் பங்கீட்டு பிரச்னைகளை தீர்வு காண மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்திற்கு நீண்ட காலம் தலைவர் நியமிக்கப்படாமல் இருந்ததால் பிரச்னை ஏதும் வரவில்லை. தற்போது தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த பிப்.,1ம் தேதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. மேகதாது விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது. மேகதாது பற்றி பேச கேரள அரசும், மத்திய பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேகதாது குறித்து விவாதம் மட்டுமே நடைபெற்றது; ஓட்டெடுப்பு நடைபெறவில்லை. கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு. மேகதாது தொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
செங்கல்
தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது. பா.ஜ.,வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர். மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை. மேகதாது அணை கட்டுவதை தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதிக்காது. மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கும் உள்ளது. இவ்வாறு துரைமுருகன் விளக்கம் அளித்தார். அமைச்சரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.