அண்ணாமலையை மாற்றப்படுவதில் சந்தோஷம் இல்லை: செல்லூர் ராஜு
அண்ணாமலையை மாற்றப்படுவதில் சந்தோஷம் இல்லை: செல்லூர் ராஜு
ADDED : ஏப் 11, 2025 08:04 PM
மதுரை:'' தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதில் எங்களுக்கு சந்தோஷமும் இல்லை; வருத்தமும் இல்லை,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு கூறினார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவாக அமைச்சர் பொன்முடி பேசுவது வாடிக்கையாகி உள்ளது. பொன்முடி இழிவாக பேசியதற்கு, முதன் முதலில் எதிர்த்து பேசியது நான்தான். அமைச்சர் பதவியே 'ஓசி'தான். அந்த பதவியை வைத்துக்கொண்டு அரசுபணத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க., தமிழக பா.ஜ.,வுடன் கூட்டணி சேரப் போகிறது என ஊடகங்கள் கற்பனை வசனங்கள் எழுதுகின்றன. எங்கள் பொதுச்செயலர் பழனிசாமியை யாரும், இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்த முடியாது.
தன்னிச்சையாகத்தான் அவர் டில்லிக்குப் போய், மாநில நலன்களுக்காக அமித் ஷாவை சந்தித்தார். கூட்டணி குறித்து பேசவில்லை. தேர்தலுக்கு முன்பாக, அ.தி.மு.க., வலுவான கூட்டணி அமைக்கும்.
தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவதில் எங்களுக்கு எந்த சந்தோஷமும் இல்லை; வருத்தமும் இல்லை. அண்ணாமலையை மாற்றித்தான் ஆக வேண்டும் என, ஒரு போதும் பழனிசாமி சொல்லவில்லை.
ஜெயலலிதா எட்டடி பாய்ந்தார். பழனிசாமி 16 அடி பாய்வார். ஜெயலலிதா சிங்கம்; பழனிசாமி சிங்கக்குட்டி. அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பா.ம.க., குடும்ப விவகாரம்.
இவ்வாறு அவர் கூறினார்.

