ஆதாரங்களை திருத்தவில்லை: செந்தில் பாலாஜி வழக்கில் ஈ.டி., பதில்
ஆதாரங்களை திருத்தவில்லை: செந்தில் பாலாஜி வழக்கில் ஈ.டி., பதில்
ADDED : பிப் 16, 2024 12:53 AM
சென்னை:'முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், எந்த ஆதாரங்களையும் திருத்தவில்லை; ஏற்கனவே உள்ள ஆதாரங்களையே அமலாக்கத்துறை நம்பியுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதில் அளித்தார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இரண்டாவது முறையாக அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதாடினார்.
சிறப்பு நீதிமன்றம்
அதற்கு பதில் அளித்து, அமலாக்கத்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் நேற்று வாதாடியதாவது:
போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக, 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளன.
நீதிமன்ற உத்தரவின்படி, அந்த ஆதாரங்களை அமலாக்கத்துறை பெற்றது. அந்த ஆவணங்கள் எதுவும் திருத்தப்படவில்லை. ஜாமின் மனுவின் விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.
அது தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர் செல்வாக்குடன் தான் உள்ளார்.
பணப் பரிமாற்றம்
வழக்கில், சாட்சிகள் விசாரணை இன்னும் துவங்காத நிலையில், ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளார்.
வழக்கின் ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. 2020ல் அந்த ஆவணங்கள் பெறப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
அமலாக்கத்துறை எந்த ஆதாரங்களையும் உருவாக்கவில்லை; திருத்தவும் இல்லை.
ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களையே நம்பியுள்ளோம்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம், 1.34 கோடி ரூபாய் மட்டுமல்ல; மொத்தம் 67 கோடி ரூபாய். மீதம் உள்ள தொகை மறைக்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்கு டிபாசிட்டை பார்த்தால், 2014 முதல் 2016 வரை எகிறியிருக்கும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாகக் கூறி நியாயப்படுத்த முடியாது.
விசாரணை
ஜாமினில் விடுவிக்கப்பட்டால், எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என்பதை நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. அவருக்கு எதிராக, 30 வழக்குகள் உள்ளன. அமலாக்கத் துறையை பொறுத்தவரை, வழக்கு விசாரணையை துவங்க தயாராக உள்ளது.
மனுதாரருக்கு, ஜாமின் வழங்கக் கூடாது; மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க ஏதுவாக, விசாரணையை வரும் 19க்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.