சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது: சொல்கிறார் சீமான்
சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது: சொல்கிறார் சீமான்
UPDATED : நவ 14, 2024 10:39 PM
ADDED : நவ 14, 2024 10:31 PM

திருநெல்வேலி: ''சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது'', என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நெல்லையில் மாஞ்சோலையில் மூடப்பட்ட தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சந்தித்த பிறகு சீமான் கூறியதாவது: அனைத்தையும் நீதிமன்றங்கள் தான் முடிவு செய்யும் என்றால் பார்லிமென்ட், சட்டசபைகள் எதற்கு?
சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையாக இருக்காது. இது உலகம் முழுவதும் இருக்கிறது. சர்வாதிகாரி நேர்மையானவராக தான் இருக்க முடியும். முன்னாள் பிரதமர் நேரு மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்ட சிறந்த ஆட்சியாளர்கள் அனைவரும் அன்பான சர்வாதிகாரி ஆக இருந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் பிரச்சனை மக்கள் பிரச்சனையா நாட்டின் பிரச்சனையா?
. கட்சி விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இடமில்லை. நான் சர்வாதியாக இருக்கிறேன் என்றால் போய்விடு. வெளியேறுபவர்கள் வெளியேறட்டும். சர்வாதிகாரம் இல்லாத கட்சிக்கு போகட்டும்.
கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகிறது. இங்குள்ள இயற்கை வளங்கள் சுரண்டி அம்மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அம்மாநிலத்தில் மலை, மணல் இல்லையா? தமிழகத்தில் இங்கு இருப்பவர்கள் தலைவர்கள் அல்ல தரகர்கள். கமிஷன் வாங்கிக் கொண்டு கையெழுத்து போடும் புரோக்கர்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
வாக்குவாதம்
நெல்லையில் கே.டி.சி. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் சீமான் - நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிர்வாகிகள் கூறுகையில், தங்களின் குறைகளைக் கூறிய போது சீமான் ஒருமையில் பேசினார் எனக்குற்றம் சாட்டினர். கூட்டத்திற்கு வந்த தங்களிடம் மொபைல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது என பறித்துக் கொண்டனர் எனவும் தெரிவித்தனர்.

