வங்கி கணக்கை முடக்க வழிமுறைகள் மத்திய உள்துறை வகுக்க 'நோட்டீஸ்'
வங்கி கணக்கை முடக்க வழிமுறைகள் மத்திய உள்துறை வகுக்க 'நோட்டீஸ்'
ADDED : செப் 21, 2024 01:15 AM
சென்னை:வங்கி கணக்குகளை முடக்கும் முன், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எந்த பதிலும் இல்லை
சென்னையை சேர்ந்த சி.கே.பி.எல்.ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் அஜீத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:
சந்தேகத்துக்கு இடமான வகையில் பண பரிவர்த்தனை நடந்ததாக, மும்பை, குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த போலீசாரின் உத்தரவுப்படி, எங்கள் நிறுவன வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்து, அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த போலீசாருக்கு, இ - மெயில் அனுப்பினோம். வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டது; எந்த பதிலும் இல்லை.
போலீசாரின் உத்தரவுப்படியே வங்கி கணக்கை முடக்கியதாக, வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உத்தரவிட்டால் தான், முடக்கத்தை நீக்க முடியும் என்றும் கூறப்பட்டது.
இதுவரை, என்னிடமோ, எங்கள் நிறுவன ஊழியர்களிடமோ, எந்த விசாரணையும் நடக்கவில்லை.
தன்னிச்சையாக வங்கி கணக்கை முடக்கி உள்ளனர். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. வங்கி கணக்கு முடக்கத்தால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, முடக்கத்தை நீக்கி, வங்கி கணக்கை இயக்க அனுமதிக்க வேண்டும்.
விசாரணை
சைபர் குற்றம் தொடர்பாக, வங்கி கணக்குகளை முடக்கும் முன், பின்பற்ற வேண்டிய விதிகளை வகுக்கவும், அதை இந்தியா முழுதும் உள்ள போலீசார் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ''வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீசாரின் நடவடிக்கையால், நிறுவனத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. வங்கி கணக்கு முடக்குவதற்கு முன், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய உள்துறை வகுக்க வேண்டும்,'' என்றார்.
மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், சைபர் குற்ற தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநில போலீசாருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.