ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஐ.பி.எஸ்., அருணுக்கு நோட்டீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஐ.பி.எஸ்., அருணுக்கு நோட்டீஸ்
UPDATED : நவ 25, 2026 10:30 PM
ADDED : நவ 25, 2026 10:30 PM

– சிறப்பு நிருபர் –: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சி.பி.ஐ.,யிடம் ஆவணங்களை ஒப்படைக்க தாமதம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி, சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5ல் கொல்லப்பட்டார். இது குறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முதல் குற்றவாளியான பிரபல தாதா நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட, 28 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பான மனுக்களை, உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருகிறது.
ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில், வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருண், ஆவணங்களை ஒப்படைக்க தாமதம் செய்ததாகவும், செம்பியம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, ஐ.பி.எஸ்., அதிகாரி அருண், செம்பியம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதே சமயம், அவர்கள் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் அமர்வு குறிப்பிட்டது.
