ADDED : செப் 18, 2024 10:04 PM
சென்னை:ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து, பா.ஜ., கூட்டணி வேட்பாளர் பன்னீர்செல்வம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும்படி, நவாஸ்கனி எம்.பி.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிட்டார். பா.ஜ., கூட்டணியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட்டார். 1.66 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், நவாஸ்கனி வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், 'ஊழல் நடவடிக்கைகளில், நவாஸ்கனி ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்; வேட்பு மனுவில், உண்மை தகவலை நவாஸ்கனி மறைத்துள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.
மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, நவாஸ்கனிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, நவம்பர் 5க்கு தள்ளி வைத்தார்.