ADDED : ஏப் 04, 2026 04:30 AM
- டில்லி சிறப்பு நிருபர் -: ஐ.பி.எஸ்., அதிகாரியான வருண் குமார், ஜாதி பாகுபாடு பார்ப்பதாகவும், அவரது செயல்பாடுகள் ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.
இது தொடர்பாக, வருண் குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவதுாறு வழக்கில், தன் மீதும், குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் துாண்டுதலின் பேரில், சமூக வலை தளங்களில் அவதுாறு கருத்துகள் பதிவிடுவதாகவும், இது தொடர்பாக சீமான் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
வருண் குமார் தொடர்ந்த அவதுாறு வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு உரிமை இருக்கிறது' என கூறி சீமானுக்கு எதிரான அவதுாறு வழக்கு விசாரணையை ரத்து செய்தது.
இதை எதிர்த்து ஐ.பி.எஸ்., அதிகாரி வருண் குமார், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக சீமான் நான்கு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
