எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் வழக்கு தமிழக அரசுக்கு நோட்டீஸ்
எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் வழக்கு தமிழக அரசுக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 29, 2025 04:37 AM
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் அமைந்துள்ள இடத்தின் குத்தகையை நீட்டிக்க கோரிய மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
திருச்சியில், எஸ்.ஆர்.எம்., குழுமத்துக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ள இடத்தின் குத்தகையை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரி அந்நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எஸ்.ஆர்.எம்., குழுமம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்:
திருச்சியில் ஹோட்டல் அமைந்துள்ள இடம், கடந்த 1995ல், 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது. குத்தகை காலம் முடிந்த பின் அதை நீட்டிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வகுத்துள்ளது.
அதன் அடிப்படையில் குத்தகை காலத்தை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரி மனு அளித்த போதும், தமிழக அரசு அதை நிராகரித்தது. குறிப்பிட்ட இந்த இடத்தில், 60 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே குத்தகை காலத்தை நீட்டிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். 'ஏற்கனவே குத்தகை பாக்கி தொடர் பாக நிலுவையில் இருக்கக்கூடிய இதே விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்குடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்' என, உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -