ADDED : ஏப் 27, 2025 01:51 AM
சென்னை: தமிழக சிறைகளில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு கைதிகள், தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசும் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட, தென் ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த புரூஸ் ஹென்றி என்பவர், தன் உறவினர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், 'வங்கி கணக்கு, ஆதார் எண் போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகள், வெளிநாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கு உள்ளேயும் தொலைபேசி வாயிலாக பேச முடியவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு தரப்பில், 'வெளிநாட்டு கைதிகளின் உறவினர்களுக்காக பிரத்யேக, 'வாட்ஸாப்' எண் வழங்கப்பட்டு உள்ளது. அந்த எண்ணுக்கு உறவினர்கள் அனுப்பும் தகவல்கள், சிறை அதிகாரிகள் வாயிலாக கைதிகளுக்கு தெரிவிக்கப்படும்' என்று கூறப்பட்டது.
மத்திய அரசு தரப்பில், உள்துறை, வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.