செங்கல்பட்டு காப்பு காட்டில் பிரபல ரவுடி சுட்டு பிடிப்பு
செங்கல்பட்டு காப்பு காட்டில் பிரபல ரவுடி சுட்டு பிடிப்பு
ADDED : மார் 29, 2025 05:28 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு. தட்டாண்மலை பகுதியை சேர்ந்தவர் அசோக், 28. இவர் மீது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 'ஏ' பிளஸ் பிரிவு ரவுடிகள் பட்டியலில் இவர் உள்ளார்.
கடந்த 2022ல், செங்கல்பட்டு நகர காவல் நிலையம் எதிரே நடந்த இரட்டை கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அசோக், சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவானார்.
அசோக்கை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் காப்புக் காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கொளத்துார் - தாசரி குன்னத்துார் சாலையில் உள்ள ஆப்பூர் காப்புக் காடு பகுதிக்கு சென்ற தனிப்படை போலீசார், வனப்பகுதியில் பதுங்கி இருந்த அசோக்கை பிடிக்க முயன்றனர்.
அப்போது போலீசாரை தாக்கிவிட்டு, அசோக் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், அசோக் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், இடது கால் முட்டிக்கு கீழே குண்டு பாய்ந்து, ரவுடி அசோக் ஓட முடியாமல் விழுந்தார்.
தொடர்ந்து, அசோக்கை குண்டு காயத்துடன் மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.