தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை? முக்கிய ஆலோசனையில் தமிழக அரசு
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை? முக்கிய ஆலோசனையில் தமிழக அரசு
ADDED : அக் 18, 2024 05:06 PM

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.
அக்.31ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் மக்கள், புது துணிகள், நகைகள் என வாங்கி வருகின்றனர்.
தீபாவளிக்கு குறைந்த நாட்களே உள்ளதால் மக்கள் கூட்டம் கடைவீதிகளில் அலைமோதுகிறது. சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டு உள்ள பலரும் ரயில், பஸ் என அனைத்திலும் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.
இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழன்று வருகிறது. அதற்கு மறுநாள் வெள்ளி அனைவருக்கும் பணி நாளாகும். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு அதற்கு மறுநாளே அலுவலகம் வர முடியாத நிலை உள்ளது.
வியாழன்று பண்டிகை, மறுநாள் (நவ.1) வெள்ளியன்று பணிநாள். நவம்பர் 2 மற்றும் நவம்பர் 3 தேதிகள் சனி, ஞாயிறு. இதில் பணிநாளான வெள்ளியன்று அரசு விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறையாக கிடைக்கும்.
சொந்த ஊர்களில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு, ஞாயிறன்று மீண்டும் ஊர் திரும்பலாம் என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர். எனவே வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடுமுறை அறிவித்தால் அனைத்து தரப்பினருக்கும் பலன் அளிக்கும் என்பதால் அதுபற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. நவம்பர் 1ம் தேதி விடுமுறை அறிவிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும், தமிழக அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் மக்கள் கூறி வருகின்றனர்.