ADDED : டிச 05, 2024 11:54 PM

சென்னை : தெற்கு ரயில்வேயில், 296 பயணியர் சிறப்பு ரயில்களின் எண்கள், வரும் ஜன., 1 முதல் மாற்றப்பட உள்ளன.
தெற்கு ரயில்வேயில் உள்ள ஆறு கோட்டங்களில், 300க்கும் மேற்பட்ட குறுகிய துார, 'பாசஞ்சர்' ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், 2020 கொரோனா காலகட்டத்தில், ஜீரோவில் துவங்கும் எண்கள் உடைய பயணியர் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. பின், அவற்றில் பயணிக்க, சிறப்பு விரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதாவது, குறைந்தபட்ச கட்டணமே, 30 ரூபாயாக இருந்தது.
இந்த ரயில்களை வழக்கமான பாசஞ்சர் ரயில்களாக மாற்ற வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, இந்த ரயில்களின் கட்டணம், கடந்த பிப்., மாதத்தில் குறைக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மெமு, பாசஞ்சர் ரயில்களில், குறைந்தபட்ச கட்டணம், 30 ரூபாயில் இருந்து, 10 ரூபாயானது.
அதே நேரத்தில், ரயில்களின் எண்கள் மாற்றப்படாமல் இருந்தன. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் பூஜ்ஜியத்தில் துவங்கும் எண்கள் உடைய, 296 ரயில்களின் எண்கள், வழக்கமான ரயில்களின் எண்களாக மாற்றப்பட உள்ளன. இது, 2025 ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது.