பணி நியமன ஆணை பெற்றும் சேர முடியாமல் நர்ஸ்கள் தவிப்பு
பணி நியமன ஆணை பெற்றும் சேர முடியாமல் நர்ஸ்கள் தவிப்பு
ADDED : மார் 19, 2024 10:13 PM
சென்னை:பணி நியமன ஆணை பெற்றும், அரசு மருத்துவமனைகளில் சேர முடியாமல் நர்ஸ்கள் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் புதிதாக, 1,196 நர்ஸ்கள் பணியில் சேர நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்கள் நேற்று மாலைக்குள் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டது. நியமன ஆணையுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற போது, துறை ரீதியான கடிதம் வரவில்லை எனக்கூறி, அவர்களை பணியில் சேர்க்க, மருத்துவமனை நிர்வாகங்கள் மறுத்தன.
குறிப்பாக, மருத்துவ கல்வி இயக்ககம், பொது சுகாதாரத்துறையின் கீழ் பணியமர்த்தப்பட்ட, 40க்கும் மேற்பட்டோர் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, மருத்துவ ஊரகநல பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஷ்வரன் கூறியதாவது:
தகவல் தொடர்பு பிரச்னையால், சில இடங்களில் பணியில் சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மருத்துவமனைகளுக்கு, மின்னஞ்சல் அனுப்பப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது. நர்ஸ்கள் தாமதமின்றி பணியில் சேரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

