ADDED : டிச 19, 2025 06:01 AM

சென்னை : 'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்ததை கண்டித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
சென்னை ஓமந்துாரார் தோட்டம், சிவானந்தா சாலையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், நர்ஸ்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து, சங்கத்தின் செயலர் சுபின் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து தொகுப்பூதிய நர்ஸ்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என வாக்குறுதி அளித்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 3,000 நர்ஸ்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இன்னும், 8,000 நர்ஸ்கள் தொகுப்பூதிய அடிப் படையில் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, தொகுப்பூதிய நர்ஸ்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மனமில்லாமல் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.
எங்கள் ஆட்சியில், அரசு மருத்துவமனையை தேடி மக்கள் வருகின்றனர் என அமைச்சர் கூறுகிறார். அதற்கு பிரதான காரணமாக டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து போராட்டம் நடத்தியதாக, 900 நர்ஸ்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

