ADDED : ஆக 16, 2025 01:36 AM

சென்னை:'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' சென்னை தெற்கு மண்டலம் சார்பில், 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், நேற்று சென்னை ஒயிட்ஸ் சாலை அலுவலகத்தில் நடந்தது.
விழாவில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் தேசியக் கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:
சுதந்திர தினம் என்பது, கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமின்றி, வாழ்வின் சவால்களை சிந்திப்பதற்கான நாள். ஒரு மருத்துவராக நாட்டின் ஆரோக்கியம், மக்களின் உடல் நலம், பொருளாதாரம் என, அனைத்தையும் கவனிக்கிறேன். நோய் தொற்று குறைந்தாலும், புதிய நோய் எப்போது வரும் என, தெரியாத நிலை தற்போது உள்ளது. அதற்கு ஏற்ப மக்கள் ஆரோக்கியத்துடன், இருக்க வேண்டும்.
'விக்சித் பாரத் 2047' என்ற இலக்கில் நாடு பயணித்து வருகிறது. உயர்ந்த வருமான நாடு என்ற பொருளாதார நிலையை அடைய, ஒருவருக்கு 13,000 ஜி.டி.பி., தேவை. தற்போது நாம் 2,500 ஜி.டி.பி.,யில் உள்ளோம்.
சுகா தாரம் மற்றும் கல்வியில் முதலீடு இல்லாமல், முன்னேறிய நாடு என்ற நிலையை, நம்மால் அடைய முடியாது. ஆரோக்கியம் இன்றி பொருளாதா ர வளர்ச்சி சாத்தியமில்லை.
சத்துணவு மற்றும் ஆரோக்கியமான உணவு, தற்போது இந்தியா எதிர்நோக்கும் சவாலாக உள்ளது. நாட்டில் 50 சதவீதம் பேர் கூட ஆரோக்கியமான உணவு உண்பதில்லை. இதற்கு அறியாமை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை காரணம். அதேபோல், நம் நாட்டில் பாலின சமத்துவ முன்னேற்றமும் குறைவாக உள்ளது.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பாலியல் சீண்டல், குழந்தை திருமணம், இன்னும் பல மாநிலங்களில் உள்ளன. அறிவியல், கணிதம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில், பெண் ஆளுமை குறைவு. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், இந்திய யூனியன் வங்கி, சென்னை தெற்கு மண்டலத் தலைவர் எஸ். ஜெயராஜு, துணை மண்டலத் தலைவர் ரங்கநாதன், -ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.