'சிம்' கார்டு மட்டும் கொடுப்பதை எதிர்த்து சத்துணவு ஊழியர்கள் விடுப்பு போராட்டம்
'சிம்' கார்டு மட்டும் கொடுப்பதை எதிர்த்து சத்துணவு ஊழியர்கள் விடுப்பு போராட்டம்
ADDED : அக் 09, 2025 02:41 AM
சென்னை: மொபைல் போன் வழங்காமல், 'சிம் கார்டு' மட்டும் வழங்குவதை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டம் குறித்து, சங்க மாநிலத் தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, 40,000க்கும் அதிகமான சத்துணவு மையங்களில், 63,000க்கும் அதிகமான சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஒரே அமைப்பாளர், ஐந்து முதல் ஏழு மையங்கள் வரை பார்க்க வேண்டியுள்ளது.
இது குறித்து, அனைத்து நிலை அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்துள்ளோம். இருப்பினும் அவர்கள் இப்பிரச்னையில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சத்துணவு மையங்க ளின் செயல்பாடு குறித்து, இணைய வழியில் பதிவேற்றம் செய்யுமாறு, அரசு தரப்பில் சத்துணவு மையங்களுக்கு புதிதாக, 'சிம் கார்டு' வழங்கப்படுகிறது.
இதில், தினசரி மையங்களின் செயல்பாடு, உணவு உண்ட மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றப்பட வேண்டும். ஊழியர்களில் 50 சதவீதம் பேரிடம், 'ஸ்மார்ட்' போன் கிடையாது. மொபைல் போன் வழங்காமல் 'சிம் கார்டு' மட்டும் வழங்குவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
எனவே, அதிகாரிகள் இது போன்ற பயனற்ற செயல்களை கைவிட்டு, விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.