'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளித்தும் ரேஷன் கார்டில் பெயர் நீக்க தாமதம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளித்தும் ரேஷன் கார்டில் பெயர் நீக்க தாமதம்
ADDED : அக் 09, 2025 02:42 AM
சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளித்தும், ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய, உணவுத் துறை தாமதம் செய்கிறது. இது குறித்து கேட்டால், '30 நாட்கள் அவகாசம் உள்ளது. காத்திருங்கள்' என, அலுவலர்கள் கூறுவதால், பெயர் நீக்க விண்ணப்பித்தோர், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய விலை உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். இதை பெற, ரேஷன் கார்டில் பெயர் இல்லாமல், தனி முகவரியில் வசிப்பவர், உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணைய தளத்தில், விண்ணப்பிக்க வேண்டும்.
திருமணமாகி தனி வீட்டில் வசிப்போர், புதிய ரேஷன் கார்டு பெற, பெற்றோரின் கார்டில் இருந்து, தங்களின் பெயரை முதலில் நீக்க வேண்டும். பின், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கடைகோடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்கள், வீடுகளுக்கு அருகிலேயே கிடைக்க, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை அரசு நடத்தி வருகிறது.
இதில், ரேஷன் கார்டு பெற, மனுக்கள் பெறப்படுகின்றன. இதுவரை, புதிய ரேஷன் கார்டுக்கு, 35,000 மனுக்கள், பெயர் நீக்கத்துக்கு, 40,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்யப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது:
அரசு வீடு ஒதுக்கீடு கேட்டும், ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யவும், சென்னையில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்குள், வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வீடு ஒதுக்கீடு குறித்து தகவல் கிடைத்தது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மனு மீது நடவடிக்கை எடுக்க, 30 நாட்கள் உள்ளது; உடனே செய்ய முடியாது' என, அலட்சியமாக பதில் அளித்தனர். அதற்கு ஏன் முகாம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணியாளர் பற்றாக்குறை இருப்பதால், வீடுகளில் உடனே ஆய்வு செய்ய முடியவில்லை. பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.