சத்துணவு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
சத்துணவு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
ADDED : ஜன 22, 2026 01:58 AM
சென்னை: ''அரசின் மீதுள்ள நம்பிக்கையாலும், பள்ளி மாணவர்கள் நலன் கருதியும், சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது,'' என, தமிழ்நாடு சத்துணவு உழியர் சங்க மாநில தலைவர் செல்லதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக, கடந்த 19ம் தேதி, சமூக நலத்துறை செயலருடன் பேசினோம். அதில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று முன்தினம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினோம்.
இந்நிலையில், சட்டசபை முதல் நாள் கூட்டத் தொடரில், சபாநாயகர் வாசித்த கவர்னர் உரையில், 'சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களுக்குமான சிறப்பு ஓய்வூதியத்தை, முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தகவல், சட்டசபை குறிப்பில் இடம் பெற்றதால், பள்ளி மாணவர்கள் நலன் கருதி, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.
வரும், 24ம் தேதி சட்டசபை முடிய உள்ளது. அதற்குள் முதல்வர் இனிப்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
அவ்வாறு, அறிவிப்பு வெளியாகாவிட்டால், அடுத்த கட்ட போராட்டத்தை துவக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

